சூரத்தில் மாட்டிறைச்சி சாப்பிட மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் வலியுறுத்தியதால் சமூக வலைதளங்களில் செய்தி பதிவிட்டு கணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரோகித் ராஜ்புட் மற்றும் சோனம் இருவரும் சூரத்தில் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். அப்போது இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். சனம் வேறு மதத்தை சார்ந்த பெண் என்பதால் அவர்களது திருமணத்திற்கு ரோகித் ராஜ்புட் வீட்டில் மறுப்பு தெரிவித்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட ரோகித் ராஜ்புட், மனைவியின் குடும்பத்தினரோடு வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் ரோகித் ராஜ்புட் உயிரை மாய்த்துக் கொண்டார்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரோகித் ராஜ்புட் உயிரிழப்புக்கான காரணம் தெரியவந்தது. ரோகித் ராஜ்புட் தன்னை தானே உயிரை மாய்த்து கொள்வதற்கு முன்பு முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் நான் இந்த உலகத்தை விட்டு செல்கிறேன். எனது உயிரிழப்புக்கு எனது மனைவி மற்றும் அவரின் சகோதரர் அக்த ர்அலியே காரணம் எனவும், கொலை மிரட்டல் விடுத்து எனக்கு மாட்டிறைச்சி ஊட்டியதால் நான் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
ரோகித் ராஜ்புட் இறந்து இரண்டு மாதங்கள் ஆன பிறகு முகநூல் செய்தி குறித்து உறவினர்களுக்கு தெரிய வந்தது. அதுகுறித்து சூரத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழப்பு குறிப்பின் அடிப்படையில் சூரத் உத்னா காவல்துறையினர் சோனம் மற்றும் அக்தர் அலியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்படும் என சூரத் காவல்நிலைய ஏசிபி சோனரா தெரிவித்தார். மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரோகித் ராஜ்புட் தாயார் வீணா தேவி கோரிக்கை வைத்துள்ளார்.







