விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேங்காய், அவல், மா இலை மற்றும் பூஜைப் பொருட்கள் விற்பனை அனைத்துப் பகுதிகளிலும் களைகட்டியுள்ளது. இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ இன்று 1,600 முதல் 1,800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
50 – 60 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 200 ரூபாய்க்கும், 250 – 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் இன்று 900 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் இன்று 250 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி இன்று 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பூக்களை குறைந்த அளவே வாங்கிச் சென்றனர். இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா








