சமூக வலைதளங்கள் மூலம் தனது கணவர் 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக, காவலர் ஒருவரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் – பழனியம்மாள் என்பவரது மகனாகிய முத்துசங்கு என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணிபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனின் அரசு இல்லத்தில் பாதுகாவலராக பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவலர் முத்துசங்குவிற்கும், மதுரை டி.ஆர்.ஓ காலனி பகுதியை சேர்ந்த பி.இ.பட்டதாரியான சுபாஷினி என்பவருக்கும் திருமணமாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருமண நிச்சயத்தின் போது உதவி ஆய்வாளராக பணிபுரிவதாக கூறிய நிலையில் திருமணத்திற்கு பின் காவலராக பணிபுரிவதாக தெரியவந்த நிலையில் மனைவி சுபாஷினி கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து திருமணத்தின்போது போடப்பட்ட 25 பவுன் தங்க நகையை தருமாறு மனைவியிடம் பெற்று கணவர் அடகுவைத்துள்ளார்.
இதையடுத்து கணவர் முத்துசங்கு தினமும் அதிக நேரம் செல்போனிலேயே நேரத்தை செலவு செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனைவி சுபாஷினி, முத்துசங்கின் செல்போனை எடுத்து பார்த்தபோது, பேஸ்புக் மெசஞ்சரில் 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலியான ஐடிகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசியுள்ளதையும், ஆபாசமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து கேட்டபோது முத்து சங்கு, மனைவி சுபாஷினியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் சுபாஷினி புகார் அளித்துள்ளார். ஆனால் அப்போதைய அமைச்சர் கருப்பணன் அலுவலகத்தில் பணிபுரிவதால், காவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என கூறி காவலர்கள் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணவரின் பெற்றோரிடம் கூறியபோதும் கண்டுகொள்ளாத நிலையில், மனைவி மீண்டும் காவல்நிலையத்தில் கணவர் மீது பாலியல் தொந்தரவு புகார் அளிக்க சென்றபோது, தான் திருந்தி் வாழ்வதாக கூறி காவல்நிலையத்தில் எழுதிகொடுத்துள்ளார் முத்து சங்கு. இதனை நம்பி மனைவி சுபாஷினி கணவருடன் சென்று வாழ்ந்துவந்த நிலையில், வரதட்சனை குறைவாக கொண்டுவந்ததாகவும் கூறியதோடு, மனைவிக்கு கட்டாய பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், தன்னை ஒரு காவல்துறை உயரதிகாரி எனக் கூறி சமூக வலைதளங்களில் பிற பெண்களுடன் நெருக்கமாக பேசி, அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை காண்பித்து அவர்களை மிரட்டி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளதையும் மனைவி சுபாஷினி கண்டுபிடித்துள்ளார்.

பின்னர், இதற்கான ஆதாரங்களுடன் சில தினங்களுக்கு முன்னர், சுபாஷினி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அவரது பெற்றோருடன் சென்று புகாரளித்தார். அந்த மனுவில் தனது கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்ததோடு, சமூகவலைதளங்களில் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், தன் கணவரை நம்பி ஏமாந்த இளம்பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
காவலர் ஒருவரே போலியான சமூகவலைதள கணக்குகள் மூலமாக ஏராளமான பெண்களை ஏமாற்றிவருவதாக அவரது மனைவியே ஆதாரத்துடன் அளித்த புகார் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.