அரியலூரில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓஎன்ஜிசி விண்ணப்பித்ததாகவும் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெளியே எண்ணெய் கிணறுகள் அமைக்க விண்ணப்பித்தால், அதன் பாதிப்புகளை கண்டறிய வல்லுநர் குழு அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் 5 எண்ணெய் கிணறுகளும் அமைக்க ஓஎன்ஜிசி தரப்பில் விண்ணப்பிக்கப்பட்டதாகவும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனவும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் கூறினார்.







