திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, கணவரை இழந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்ற கைம்பெண், வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். சாந்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பால்வியாபாரி வேல்முருகனுடன் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தேடி வந்த நிலையில், விஏஓ உதவியுடன் கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் வேல்முருகன் சரணடைந்தார்.
போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, தவறான உறவு காரணமாக, இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கணவரை இழந்த சாந்திக்கும், பால் வியாபாரி வேல்முருகனுக்கும் சில ஆண்டுகளாக உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திடீரென வேல்முருகனை விட்டு, சாந்தி விலகியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த வேல்முருகன் சாந்தியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், வேல்முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.








