முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு கட்டுரைகள் தமிழகம்

திமுக மாவட்டச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மகளிர் முன்வராததற்கான காரணம் என்ன?


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

 

திமுக மாவட்டச்செயலாளர் பொறுப்புக்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும் திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி கூறி இருப்பது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.

ஆனால் அப்படி நிகழ்வது என்பது தமிழக அரசியலிலேயே அரிதாகவே, அபூர்வமாகவே இருக்கிறது. அரசியல் கட்சிக்குள் குழு மனப்பான்மையை வளர்க்காமல் புதிய வேகத்துடன் கட்சியை கோண்டு செல்லக்கூடியவர்களுக்கும், தேர்தல் களங்களிலும், மக்கள் நலப் பணிகளிலும் திறமையாக செயல்படுபவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளை கட்சிகள் வழங்கி வருகின்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக விதி

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என குரல்கொடுக்கும் கட்சிகளில் கூட வேட்பாளர்களாக, கட்சி நிர்வாகிகளாக 33% பெண்கள் இருப்பதில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. பெண் உரிமைகளுக்கான திட்டங்களை அதிகமாக செயல்படுத்துவதாகக் கூறும் திமுகவில் பெண்களுக்கான முக்கியத்துவத்திற்காக விதிகளே உள்ளது. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர், மாவட்ட துணைச்செயலாளர், பொதுக்குழு, தலைமைச்செயற்குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளில் மகளிர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கட்சி விதியால் அதுபோன்ற பதவிகளில் மட்டும் மகளிர் தேர்வு செய்யப்படும் நிலை காணப்படுகின்றது.

மகளிருக்கு முக்கியத்துவம்

திமுகவில் கரூர் வாசுகி முருகேசனுக்குப் பிறகு பெண் மாவட்டச் செயலாளர்கள் இல்லை என்ற நிலை இருந்தபோது, அதனை களையும் வகையில், பெண்களுக்கும் மாவட்டச்செயலாளர் பொறுப்பில் முக்கியத்துவம் அளிக்க 2014 ஆம் ஆண்டு அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் அமைச்சர் கீதா ஜீவன் மட்டும் மாவட்டச்செயலாளர் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மனுத்தாக்கலில்லை

திமுகவின் 72 மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுள்ள நிலையில், மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட மகளிர் விருப்பம் தெரிவிக்காத நிலையே காணப்படுகின்றது. திமுகவின் உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்டச்செயலாளர் பொறுப்பிற்கு வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. 72 மாவட்டங்களின் அவைத்தலைவர், செயலாளர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றுள்ளது.

விருப்பமில்லை?

திமுகவின் 72 மாவட்டங்களில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் கீதா ஜீவன், மீண்டும் அதே பொறுப்பிற்கு போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். வேறு மாவட்டங்களில் மகளிர் போட்டியிட விருப்பம் தெரிவிக்காத நிலை காணப்பட்டுள்ளது.

கனிமொழி அழைப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் (19) தூத்துக்குடியில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுகக்கூட்டத்தில் பேசிய திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, “தமிழகத்தில் மாவட்ட செயலாளர்களாக பலர் இருந்தாலும் பெண் மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மட்டும் பணியாற்றி வருகிறார். இவரை போல் பணியாற்றுவதற்கு 10 அல்லது 20 பெண்கள் வரவேண்டும்” என விருப்பம் தெரிவித்திருந்தார். இப்போது மட்டுமில்லை, பெண்களுக்கு அரசியல் கட்சிகளிலும், நாடாளுமன்ற சட்டமன்றங்களிலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் தான் கனிமொழி.

ஏன் வரவில்லை?

ஆண்களே கோலோச்சும் அரசியல் களத்தில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் 50% மகளிருக்கு அளிக்கப்பட்டாலும், அவர்களின் கணவரோ, உறவினரோ ஆதிக்கம் செலுத்துவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போன்றோர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினாலும், தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வலுவாக ஆதிக்கம் செலுத்தினாலும் உயர்பதவியில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தருவதில் அவர்களும் அதிக அக்கறையோ ஆர்வமோ காட்டவில்லை என்றே சொல்லிவிடலாம்.


பெண்களை மாவட்டச்செயலாளர்களாக்கும் போது எழும் கடினமான சூழல்களைத் தவிர்ப்பதற்காக திமுக தலைமையும் அவர்களை ஊக்குவிக்கவில்லையா? கடும் விமர்சனங்களையும், சிக்கலான சூழல்களையும் எதிர்கொள்ள பெண்கள் முன்வரவில்லையா? கட்சியில் தடங்கல்கள், விமர்சனங்களை மீறி பெண்கள் வளர முடியாததற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லையா? என பல்வேறு கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. என்றாலும் ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று கூறப்படுவதை உண்மையாக்கவும், இதுபோன்ற சவால் நிறைந்த களங்களை எதிர்கொள்ள மகளிரைத் தயார்படுத்தவும் தலைமை முன்வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அப்படி செய்தால் மட்டுமே மகளிரின் முன்னேற்றமும், மேம்பாடும் விரைவில் கைகூடும்.

– கட்டுரையாளர்: இலா. தேவா இக்னேசியஸ் சிரில் @Deva_icL

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி; காவல்துறையினரை நெகிழ வைத்த அரசுப்பள்ளி மாணவிகளின் செயல்

Dinesh A

10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது

Gayathri Venkatesan

வெளியானது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை

Arivazhagan Chinnasamy