அதிமுக அலுவலக கலவர வழக்கில் திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டதாக அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீஸார் அதிமுக அலுவலகத்தில் இருந்து காணாமல்போன ஆவணங்கள் அனைத்தையும் மீட்டுள்ளனர்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகப் பத்திரம், ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்டின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள கட்சியின் சொத்து பத்திரம் ஆகியவை உட்பட 113 செட் ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








