குடும்பத்தில் கணவன் மற்றும் மாமியார் உடன் பெண்களுக்குப் பிரச்சனை என்றால் பெண்கள் சேவை மையத்தை அணுகித் தீர்வு காணலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள சத்யா நினைவு இல்லம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மகளிர் சேவை மையம் பாரதி நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்ட உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்ல புதிய கட்டடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்டெடுப்பது, பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கல்வித்துறை சமூக நலத்துறை சுகாதாரத்துறை இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து இடங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உள்ளதாகக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘சர்வதேச தரத்திற்கு மாறும் காசிமேடு துறைமுகம்!’
மேலும், பெண்கள் குழந்தைகள், திருநங்கைகள், முதியோர்கள் பாதுகாப்பு அவர்களின் உரிமையை நிலை நாட்டுதல் அதற்கான திட்டங்களையும் சட்டங்களையும் முறைப்படுத்தி வருகிறோம் எனத் தெரிவித்த அவர், பெண்களின் உதவி சேவை எண் 181 என்பதை அனைத்து தரப்பு பொதுமக்களிடம் கொண்டு சென்று வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கணவன் மனைவி சண்டை, மாமியார் சண்டை என எங்கும் கோபித்துக் கொண்டு பெண்கள் செல்ல வேண்டாம் உங்களுக்கென்று மகளிர் சேவை மையம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அங்குச் செய்து கொடுக்கப்படும் எனக் கூறினார்.








