காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? – எ.வவேலு கேள்வி!

காலை உணவுத்திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்தது ஏன் என்று திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.

2026-27-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. அதன்படி இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதில் அளித்து வருகின்றனர்.

அதன்படி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எ.வ.வேலு, “முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை காமராஜர் உணவுத் திட்டம் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? வேறு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, காமராஜர் பெயரை வைக்கலாமே? நாங்கள் வைத்த திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைப்பது ஏன்?

முதலமைச்சர் என்பது பொதுவான சொற்சொடர். அது யாரையும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அல்ல. ஆகையால் ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்கு பெயர் மாற்றியது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோக, “கலைஞரை நாங்கள் மதிக்கிறோம். 1996-க்கு பிறகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் அவர் பெயர் மாற்றம் குறித்து பேசியிருந்தார். கலைஞர் ஆட்சி அமைந்த பிறகு ஜேஜே சினி சிட்டியை எம்ஜிஆர் திரைப்பட நகராக பெயர் மாற்றியவர் கலைஞர். எனவே பெயர் மாற்றம் காலங்காலமாக நடந்து வருகிறது. அம்மா பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறியிருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் மினி கிளினிக் ஆக மாறியிருக்கிறது.

நான் 10 இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன், நீ படிக்கின்ற வேலையை மட்டும் பார் என்ற காமராஜர் பெயர் தான் இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பொருத்தமானது.
இந்த திட்டம் ரூ.203 கொடியே 72 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.