தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியான வன்முறை மற்றும் கொடூரச் சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் வலியிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது ;
தமிழகத்தில் தினசரி கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதி நவீன போதை பொருள் புழக்கம் தமிழகத்தில் உள்ளது. கையில் புத்தகம் ஏந்தி கல்வி நிலையம் செல்லும் வயதில் அரிவாள் தூக்கும் நிலையில் உள்ளது. அதனால் தான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு அரசியலமைப்பு சட்டம் 356-ஐ பயன்படுத்த போவதில்லை. இந்த ஆட்சிக்கு 90 நாள் தான் உள்ளது. அதனால் அரசியலமைப்பு சட்டம் 356 ஐ மக்கள் கையில் எடுத்துள்ளார்கள். சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள். தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் வரும்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் தயாராகிவிட்டது. விபின் சக்கரவர்த்தி என்ற சின்ன மீனை விட்டு பரிசோதனை செய்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 90 நாளகள் உள்ளது. பொங்கலுக்கு பின்னர் கூட்டணியின் நிலை உறுதியாக அறிவிக்கப்படும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 4 ம் தேதி திருச்சி வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழகம் தலை நிமிர தமிழன் பயணத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் 5 ம் தேதி அமித்ஷா ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அமித்ஷா பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
ஓ.பி எஸ் – இ.பி.எஸ் இணைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம். ஆனால் அது அதிமுக விவகாரம்.
தமிழக அரசு யாரிடம் கடன் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளது. தமிழகத்தின் அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசு 60% கொடுக்கிறது. மீதம் உள்ள 40% மட்டும் தான் தமிழக அரசு கொடுக்கிறது. தமிழகத்தில் நிதி மற்றும் நீதி நிர்வாகங்கள் சரியில்லை” என்று தெரிவித்துள்ளார்







