நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் முஜிப் ரஹ்மான், சுஜின் ஆகியோர், ஊரடங்கு காலத்தில், பாதி ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் இருந்த நகைக்கடையை பார்த்த அவர்கள், கடைக்குள் சென்று நகை, பணத்தை எடுத்துள்ளதாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், கடை உரிமையாளர் நகை, பணத்தை சரிபார்த்போது, 5 லட்சம் ரூபாய் குறைந்தது தெரியவந்தது. மேலும், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, காவலர்கள் பணத்தை எடுத்து தங்களின் பாக்கெட்டில் வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்த நிலையில், காவலர்கள் முஜிப் ரஹ்மான் மற்றும் சுஜினை காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பணத்தை திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்றும், வழக்குப்பதிவு செய்யாத காவல்நிலைய ஆய்வாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியது. இதுகுறித்து, நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மனித உரிமை உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.