Ex. MLA வீட்டில் ரெய்டு ஏன் ?

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் வரை சொத்துக் குவித்ததாக லஞ்சஒழிப்புத் துறை  வழக்கு பதிவு செய்து தற்போது ரெய்டு நடத்தி…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி. பாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் வரை சொத்துக் குவித்ததாக லஞ்சஒழிப்புத் துறை  வழக்கு பதிவு செய்து தற்போது ரெய்டு நடத்தி வருகின்றனர். இவரது மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்ன ? என்பதை தற்போது பார்க்கலாம்.

நாமக்கல் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கே பி பி பாஸ்கர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாஸ்கர் அவரது மனைவி உமா  ஆகியோர் சட்டவிரோதமாக நிலம், நகை, சொத்துக்கள் வாங்கியதை லஞ்ச ஒழிப்பு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய்  சொத்துக்கள் மட்டுமே பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 7.5 கோடி ரூபாயாக அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. மேற்கண்ட இத்தகவல் அவர்கள் மீது தொடரப்ப்பட்டுள்ள வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 7.5 கோடி ரூபாய் சொத்து மதிப்பில் சட்டரீதியாக வாங்கப்பட்ட நிலங்கள் மற்றும் நகைகளை தவிர சட்டவிரோதமாக 4.72 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டதும் இந்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., பாஸ்கரின் வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் 2016 ஆம் ஆண்டு தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். அந்த நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கு பிறகு படிப்படியாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு சொத்துக்களை வாங்கி குவிக்க இவர் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அரசு பதவியை தவறாக பயன்படுத்தியதாக தெரிகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது  ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் கே பி பாஸ்கர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இது வன்மையாக கண்டிக்கதக்கது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,

இரா.சுப்பிரமணியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.