பொதுக்குழுவில் சந்திப்போம், புது வரலாறு படைக்க சபதமேற்போம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
வரும் 15 ஆம் தேதி அமமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எந்தவித எதிர்பார்ப்புமின்றி அமமுகவில் பயணிக்கும் ஒவ்வொருவரின் கனவும் நனவாகும் நாள் வெகுதூரமில்லை. விடுதலை திருநாளான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறவிருக்கிறது. அம்மா அவர்களின் திருப்பெயரை தாங்கிய நம் இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட வாரியாக உங்களை எல்லாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருந்தாலும், உங்கள் அத்தனை பேரின் திருமுகங்களையும் ஒரு சேர, ஒரே இடத்தில் காணும்போது எனக்குள் எல்லையில்லாத உற்சாகமும், உத்வேகமும் உருவாகிவிடும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஏனெனில், சோதனை சூறாவளி சுழன்றடித் போது பணத்திற்கோ, பதவிக்கோ விலை போகாமல் இந்த இயக்கத்தைக் கட்டி எழுப்பியது நீங்கள்தானே! தொடக்கத்தில் இருந்தே கல்லும் முள்ளும் நிறைந்த போராட்டப் பாதையில் நாம் பயணித்தாலும் ஒரு கணமும் தளர்வடையாத நம்பிக்கையோடு இந்த இயக்கம் வீறுநடை போடுவதற்கு ஊற்றுக்கண் நீங்கள்தானே!
செயற்குழு-பொதுக்குழு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுதான் என்றாலும் புரட்சித் தலைவி அம்மாவின் லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நமது சபதத்தை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாகவே இதனைப் பார்க்கிறேன். கடந்தாண்டு கொரோனா பாதிப்பினால் இணையவழியில் பொதுக்குழுவை நடத்தினோம்.
இந்தாண்டு சென்னையில் அம்மா பொதுக்குழுவை நடத்திய அதே இடத்தில், அம்மா கற்றுத் தந்த ஒழுங்கோடும், கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் தமிழ் கூறும் நல்லுலகம் வியந்து பார்த்திடும் வகையில் சிறப்போடு நடத்தவிருக்கிறோம் என்றார் டிடிவி தினகரன்.








