தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு கிடைத்துவிடக் கூடாது என்பதும், உண்மையான OBC எண்ணிக்கை வெளிவந்துவிடக் கூடாது என்பதும் RSS-ன் திட்டமிட்ட சதி! RSS-ன் உள்நோக்கத்தை நிறைவேற்ற, தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி வெறும் முகமூடியாக இருந்து, அமித் ஷாவுடன் சேர்ந்து இந்த வஞ்சகத்தை அரங்கேற்றுகிறார்.
2-ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் தலையாய நோக்கமே சாதி விவரங்களைச் சேகரிப்பதுதான்; அது சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான விவகாரம் என்பது அனைவரும் அறிந்தது. SC, ST பிரிவினருக்கு தெளிவான பட்டியல் இருக்கும் போது, OBC சாதி விவரங்களை மட்டும் முன்பே வரையறுக்கப்பட்ட பட்டியல் இன்றி ‘open-ended’ முறையில் சேகரிப்பது ஏன்?
ஒன்றிய அரசின் பட்டியலிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 220-க்கும் மேற்பட்ட OBC சாதிகள் இருக்கும் போது, துல்லியமான பட்டியலைத் தராமல் பொதுவான கேள்வியாக வைப்பது மோடி அரசின் திட்டமிட்ட நாடகம்!
34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடும் ஒரு நடைமுறையில், முன்வரையறுக்கப்பட்ட பட்டியல் எதுவும் இல்லாமல் தவறுகளின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது வடிகட்டிய பகல்கனவு! ஒரு சிறிய எழுத்துப் பிழை கூட ஒரு சமுதாயத்தை வேறொரு சமூகப் பிரிவாக மாற்றிவிடும் பேராபத்து இதில் உள்ளது. தெளிவான Drop-down பட்டியலைத் தவிர்த்துவிட்டு இப்படி ஒரு குளறுபடியான முறையைக் கையாள்வது மொத்தக் கணக்கெடுப்பையும் படுதோல்வியிலேயே முடிக்கும்.
இது வெறும் நிர்வாகக் குளறுபடி அல்ல; உண்மையான OBC எண்ணிக்கையைத் திட்டமிட்டே குறைத்துக்காட்டி, எதிர்காலத்தில் இடஒதுக்கீட்டையே அடியோடு சிதைத்துவிடும் பேராபத்து!
பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரமற்றவர்களாகவே முடக்கி வைக்க வேண்டும் என்பதே RSS-ன் நூற்றாண்டு கால சித்தாந்தம். RSS-ன் சமூக நீதி எதிர்ப்பு அஜெண்டாவைச் செயல்படுத்தும் முகமூடிகளாகத்தான் மோடியும் அமித் ஷாவும் இந்த துரோகத்தை அரங்கேற்றுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்து, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் இந்த RSS-மோடி கூட்டணியின் சதியை முறியடிப்போம்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




