மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய UPI கட்டமைப்பு, தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பரிமாற்றம் செய்யப்படும் தொகையைப் பொருட்படுத்தாமல், தனிநபர்களுக்கு இடையிலான அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் upi சேவை தொடர்ந்து முற்றிலும் இலவசமாகவே இருக்கும்.
வணிகர்களுக்குச் செய்யப்படும் ₹2,000 வரையிலான கட்டணங்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கான ‘பூஜ்ஜிய-MDR’ (zero-MDR) கட்டமைப்பின் கீழ் வரும் பரிமாற்றங்கள் ஆகியவையும் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும். இதன் விளைவாக, P2M (நுகர்வோரிலிருந்து வணிகருக்கான) பரிமாற்றங்களில் சுமார் 96% பரிமாற்றங்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது. ₹2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட வணிகப் பரிமாற்றங்களுக்கு மட்டுமே MDR பொருந்தும்.
MDR என்பது அரசாங்கத்தாலோ அல்லது NPCI-ஆலோ வசூலிக்கப்படும் வரியோ அல்லது கட்டணமோ அல்ல என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. UPI கட்டமைப்பின் செயல்பாட்டிற்கும் அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில், வங்கிகள் மற்றும் கட்டணச் செயலி (payment application) வழங்குநர்கள் உள்ளிட்ட கட்டணச் சூழல் அமைப்பில் (payment ecosystem) பங்கேற்பாளர்களிடையே இது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
UPI வழிநடத்தல் குழுவின் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, ‘கட்டணம் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007’-ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு, தனிநபர்கள் மற்றும் சிறு வணிகர்களைக் கூடுதல் கட்டணங்களிலிருந்து பாதுகாப்பதோடு, UPI-யின் நீண்டகால நிலைத்தன்மையையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 வரையிலான கட்டணங்கள் இலவசமாகவே தொடரும் – மத்திய அரசு
தனிநபர்களுக்கு இடையிலான அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் upi சேவை தொடர்ந்து முற்றிலும் இலவசமாகவே இருக்கும் என்று மத்திய அரசு செரிவித்துள்ளது.




