சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி கேலரி ஏன்?- ஒரு பார்வை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அதில் இரண்டு முறை முதலமைச்சரின் தொகுதி என்கிற பெருமையை பெற்ற தொகுதி  சேப்பாக்கம். அதிலும் 1996ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் அவர்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அதில் இரண்டு முறை முதலமைச்சரின் தொகுதி என்கிற பெருமையை பெற்ற தொகுதி  சேப்பாக்கம். அதிலும் 1996ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் அவர் 77.1 சதவீத வாக்குகளைப் பெற்று தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி அதிக முறை போட்டியிட்ட தொகுதியான சேப்பாக்கம் அவருக்கு மீண்டும் ஒரு கவுரவத்தை கொடுக்கப்போகிறது. ஆனால் இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. 

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மைதானத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி அரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17)  திறந்து வைக்க உள்ளார். தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கும்  இந்த நிகழ்வில், கருணாநிதிக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியும் கலந்துகொள்கிறார்.

 ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகருக்கு, சேப்பாக்கத்தோடும் அதில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருக்கு, கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தியவருக்கு, தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையை 5 முறை அலங்கரித்த மூத்த அரசியல் தலைவருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கொடுத்துள்ள கவுரவம் இது.

எதிர்க்கட்சியினரின் அரசியல் விளையாட்டுக்களை சாதுர்யமாக, ராஜதந்திரத்தோடு வென்று காட்டிய  கருணாநிதி மிகவும் ரசித்துப் பார்க்கும் விளையாட்டு கிரிக்கெட். வெறுமனே அதனை பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடும் ரசிகர் மட்டுமல்ல, எந்த பேட்ஸ்மேன் எந்த இடத்தில் இறங்கி ஆட வேண்டும் என்று  ஆய்வு செய்யும் அளவிற்கு கிரிக்கெட் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தார் கருணாநிதி. இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை மட்டுமல்ல வெளிநாட்டு கிரிக்கெட்டு வீரர்களின் பெயர்களையும் நினைவு கூறும் அளவிற்கு தனது பிஸியான  அரசியல் வாழ்விலும் கிரிக்கெட் மீது ஆர்வம் வைத்திருந்தவர் கருணாநிதி.

ஒரு முறை கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் தொடரை தொடங்கி வைக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்தை அழைத்த போது, ”நிச்சயமாக வருகிறேன். அரசியல் காரணங்களுக்காக வரவில்லை. கருணாநிதி கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார் என்பதற்காக வருகிறேன்” என்று நெகிழ்ச்சியோடு சேப்பாக்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான ஜெ.அன்பழகனிடம் கூறியிருக்கிறார்.  கருணாநிதி, ஜெ. அன்பழகன் ஆகிய இருவரும் மறைந்துவிட்டாலும் சேப்பாக்கம் மைதானத்தோடும், கிரிக்கெட்டோடும் அவர்களின் நினைவலைகள் என்றும் நீங்காதவை.

கருணாநிதிக்கு கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தை  ஊடகங்களிடம் பலமுறை பகிர்ந்துகொண்டுள்ளார் ஜெ.அன்பழகன். ”ஐபிஎல் மேட்ச் தொடங்கி டெஸ்ட் போட்டி வரை கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களையும் ஆர்வத்துடன் பார்ப்பார் கருணாநிதி. கட்சி நிர்வாகிகளில் யாருக்கு கிரிக்கெட் ஆர்வம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அவர்களிடம் கிரிக்கெட் குறித்து ஆர்வமுடன் விவாதிப்பார். கபில்தேவும், டெண்டுல்கரும் அவருக்கு பிடித்தமான வீரர்கள்.

ஸ்ரீகாந்த் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்ததாலும், இந்திய அணிக்கே ஒரு கட்டத்தில் தலைமை வகித்ததாலும் அவரை தலைவருக்கு மிகவும் பிடிக்கும். ஸ்ரீகாந்தை அழைத்து கிரிக்கெட் குறித்து பேசுவார். “இந்திய அணி நிச்சயம் ஜெயிக்கும்யா” என்று நம்பிக்கையோடு கடைசி வரை போட்டியை பார்ப்பார். சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் கருணாநிதி, சில போட்டிகளில் அவர் நன்றாக ஆடாவிட்டால், ”எல்லா போட்டியிலும் சிறப்பா விளையாட முடியுமாய்யா” எனக் கூறி தன்னை தானே ஆறுதல்படுத்திக்கொள்வார்“ என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கிரிக்கெட் ஆர்வம் குறித்த தனது நினைவுகளை தான் உயிரோடிருந்த காலங்களில் ஜெ.அன்பழகன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

”சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளை நேரடியாக கண்டு ரசித்துள்ளார் கருணாநிதி. கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக எவ்வளவோ செய்துள்ள அவர், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 60களில் மாற்றி கட்டப்பட்ட காலத்தில் 15 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்கி அந்த மைதானம் புதுப்பொலிவடைய முக்கிய காரணமாக இருந்தவர். அந்த மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கத்திற்கு அவர் பெயரை வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதாலேயே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கருணாநிதி பெயரை சூட்டியுள்ளது” என விளக்கம் அளிக்கிறார் அந்த சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி.

சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தபோது,  அதனை சிலர் விமர்சித்த நிலையில் தனது வாழ்த்துக்கள் மூலம் அதற்கு பதிலடி கொடுத்தார் கருணாநிதி. ”கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்தவர் நீங்கள். வரலாறு உங்களால் அலங்கரிக்கப்படுகிறது. உங்களின் ஈடு இணையற்ற சாதனையை ஊக்கப்படுத்தும் வகையில் உங்களுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் இயற்கையானது” என வாழ்த்தி அவரை உற்சாகப்படுத்தினார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது இந்திய அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்தார் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி. மேலும் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையையும் வழங்கினார்.  கருணாநிதி தனது இறுதிக் காலத்தில் உடல் நலம் சரியில்லாமல்  இருந்தபோதுகூட கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைராகியது. இந்த காட்சியை கண்டவர்கள் அவருக்கு கிரிக்கெட் மீது இருந்த பற்றுதலை நினைத்து உருகிப்போனார்கள்.

 

இப்படி கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட ஆர்வலராகவும், கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபட்டவராகவும் விளங்கிய கருணாநிதியின் பெயரை,  அவரோடு நெருங்கிய தொடர்புடைய சேப்பாக்கம் தொகுதியில் அமைந்துள்ள மைதானத்தில்  இருக்கும் ஒரு பார்வையாளர் மாடத்திற்கு சூட்டுவது மிகவும் பொருத்தமானதுதான்.

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22ந்தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. அப்போது ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் கருணாநிதி அரங்கம் களைகட்டும். அங்கு வியாபிக்கும் ரசிகர்களின் உற்சாக அலையில் கருணாநிதியின் நினைவலைகளும் கலந்திருக்கும்.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.