செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு தம்பி என பெயரிட்டது ஏன்? என முதலமைச்சர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு 4 மாதங்களில் சிறப்பாக செய்து முடித்தாக கூறினார்.
மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை மட்டுமின்றி சுற்றுலா மற்றும் தொழில்துறையும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என பெருமிதம் தெரிவித்தார். கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சதுரங்கம் தமிழ் இலக்கியத்தில் ஆனைக்குப்பு என்ற பெயரில் குறிப்பிடட்டுள்ளதாக கூறினார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான செஸ் சின்னத்திற்கு தம்பி என பெயரிடப்பட்டுள்ளதை குறிப்பிட்ட முதலமைச்சர், அறிஞர் அண்ணா அனைவரும் தம்பி என அழைத்ததை நினைவு கூர்ந்தார். அதன் காரணமாகவே சின்னத்திற்கு தம்பி என பெயரிடப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
– இரா.நம்பிராஜன்








