பிரதமருக்கு தொல்காப்பியம் நூலை பரிசளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு வந்த பிரதமர், கார் மூலமாக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு சென்றார். பிரதமருடன் அந்த காரில் ஆளுநர் ஆர்.என்.ரவியும் வந்தார்.
நேரு உள்விளையாட்டரங்கம் வந்த பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொல்காப்பியம் நூலின் ஆங்கிலப் பதிப்பை அளித்து வரவேற்றார். வழக்கமாக முதலமைச்சர் தலைவர்களுக்கு அளிக்கும் நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். அந்த வகையில் முதலமைச்சர் தமிழரின் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை அளித்து வரவேற்றுள்ளார். அத்துடன், மேடையில் வைத்து மாமல்லபுரம் கோயில் வடிவிலான சிறிய சிலையையும் பிரதமருக்கு பரிசளித்தார்.
பிரதமர் சதுரங்கம் கரை வைத்த வேட்டி, சட்டையும், முதலமைச்சர் பட்டு வேட்டி, சட்டையும் என தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். அதுபோலவே பிரதமர் பேசும்போதும் சரி, முதலமைச்சர் பேசும்போதும் சரி தமிழ்நாட்டின், மொழியின் வரலாறு குறித்தே பேசினர்.







