“கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை கடுமையாக சாடிய திமுக எம்.பி. வில்சன்!

உண்மையிலேயே அக்கறை இருந்தால் 10 வருடமாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை என்று கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு முன்னர்,  பரப்புரை விறுவிறுப்பாக…

உண்மையிலேயே அக்கறை இருந்தால் 10 வருடமாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை என்று கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு முன்னர்,  பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கிடைத்த தகவல்களை பகிர்ந்திருந்தார்.  அப்போது கச்சத்தீவு அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியின் ஒப்புதலோடு வழங்கப்பட்டதாகவும்,  காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.  அண்ணாமலையில் இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியும் பகிர்ந்து,  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான பி.வில்சனும் கச்சத்தீவு விவகாரம் குறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:

“பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் வெளியிடப்பட்டு,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரால் மேற்கோள் காட்டப்பட்ட கச்சத்தீவு விவகாரம் குறித்த  ‘ஆர்டிஐ’ பதில் முற்றிலும் புனையப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.  பாஜகவினர் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  1976 இல் எந்த ஒரு பிரதேசத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை என்று 2015ம் ஆண்டு ஆர்டிஐ-ன் கீழ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த மற்றொரு பதிலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நானே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது,  ​​‘இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதி முன் உள்ளதால்,  ஒப்பந்தங்கள் குறித்து பாஜக அரசு எதுவும் செய்யவில்லை’ என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.  அப்படியானால், எப்படி ஒரு PIO-ஆல்,  RTI கொடுக்க முடியும்? இது பாஜக வெளியிட்ட ஆர்டிஐ பதில், போலியான,  புனையப்பட்ட பதில் என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.  இது நடத்தை விதிகளை மீறுவதைப் போன்று,  அரசாங்கப் பதிவேடுகளைத் திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் ஆகிய கிரிமினல் குற்றங்கள் அல்லவா? காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து,  இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

https://twitter.com/PWilsonDMK/status/1788465739902616034

2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ஒரு நாட்டின் பிரதமருக்கு எப்படி கச்சத்தீவு பற்றிய சிந்தனை வருகிறது? இது தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவாற்றலா அல்லது தேர்தல் பாசாங்குத்தனமா? 2024ம் ஆண்டு ஜனவரியில் இருந்து தமிழ்நாட்டை நினைவு கூர்ந்தது போல,  மார்ச் மாதத்தில் பிரதமரின் சொற்களஞ்சியத்தில் கச்சத்தீவு விவகாரம் சேர்ந்துள்ளது.  கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால்,  அதை மீட்க 2014 முதல் 2024 வரை ஏன் சிறு விரலை கூட அசைக்கவில்லை?”

இவ்வாறு எம்.பி. பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.