முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

அன்வர் ராஜா நீக்கத்திற்கான பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்


விக்னேஷ், மூத்த செய்தியாளர்

கட்டுரையாளர்

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்தவருமான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பயணித்த அன்வர் ராஜா நீக்கத்திற்கான பின்னணி என்ன?

அன்வர் ராஜா, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்து அதிமுகவில் பயணித்து வரும் மூத்த தலைவர்களிலும் ஒருவர். அதிமுக சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்துவந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் தலைமைக்கு மாறாக கருத்துக்களை தெரிவித்த காரணத்திற்காக நீக்கப்படுவதாக கட்சியின் இரு தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா ஆதரவாளராக இருக்கும் அன்வர் ராஜா, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதை விமர்சித்தவர். சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுகவில் நீடித்த மூத்த தலைவரான அன்வர் ராஜா, கூட்டணிக் கட்சியான பாஜகவை பல்வேறு சமயங்களில் கடுமையாக விமர்சித்தவர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று கூறியவர்களில் ஒருவர்.

ஓபிஎஸ் – இபிஎஸ் இரட்டை தலைமையிலான அதிமுகவில் இருந்தாலும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு, சசிகலா – டிடிவி தினகரைனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியது, மீண்டும் மாநிலங்களவை பதவி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தற்போதைய இரட்டை தலைமை மீது அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்தார் . “தற்போதைய அதிமுக தலைமை வலிமையற்று உள்ளது. வலுப்படுத்த சசிகலா வர வேண்டும்” என அண்மையில் இவர் பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்தச் சூழலில் தான் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் கடந்த வாரம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல், கட்சியை பலப்படுத்துவது தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் நோக்கம் என்றாலும் அங்கு நடந்ததோ வேறு. கூட்டம் தொடங்கியதுமே முன்னாள் அமைச்சர்கள் முதல், பல மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவை நோக்கி ஆவேசமாக பேசத்தொடங்கினர். சமீபத்தில் அதிமுகவின் தலைமை குறித்து அன்வர் ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறிவந்ததே அதற்கான காரணம்.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அன்வர் ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல மாவட்டச் செயலாளர்கள் தலைமையிடம் வலியுறுத்திய நிலையில் அவர் மன்னிப்பு கோரியதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் அதனை தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களிலும் நாளிதழ்களுக்கும் அன்வர் ராஜா அளித்த பேட்டியில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ்க்கு இடையே மனக்கசப்பு இருப்பது உண்மைதான் எனவும், அதிமுக ஒற்றைத் தலைமையை நோக்கி நகர்கிறது என மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

தொடர்ந்து கட்சியையும், தலைமையும் விமர்சனம் செய்து வந்த அன்வர் ராஜா, அதிமுக செயற்குழுவில் பங்கேற்க கூடாது என முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் அழுத்தமே நள்ளிரவு நேரத்தில் அவரது நீக்கம் குறித்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

G அல்லது அ என்ற எழுத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை

Ezhilarasan

மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால் கோரிக்கை

Vandhana

ஐக்கிய அரபு நட்டில் விண்வெளி ஆராய்ச்சிப் பயிற்சிக்காக தேர்வான முதல் பெண்!

Gayathri Venkatesan