குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் வெளியான முடிவுகளை விரிவாகப் பார்ப்போம்…
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலபிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து 6 முறையாக அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே 189 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டபேரவைக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் கட்ட தேர்தலும், நேற்று 2ம் கட்ட தேர்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில் 63 சதவீத வாக்குகளும், 2ம் கட்ட வாக்குப்பதிவில் 59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் நேற்று நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது அகமதாபாத்திற்கு அருகே உள்ள ராணிப் நகரில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். அதேபோல், அகமதாபாத்தின் நாரன்புரா பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களித்தார்.
குஜராத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, செய்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை வெளியிடத் தொடங்கின. அதில், குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 117 முதல் 140 இடங்களும், காங்கிரசுக்கு 34 முதல் 51 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 6 முதல் 13 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி 9 குஜராத்தி நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 125 முதல் 130 இடங்களும், காங்கிரசுக்கு 40 முதல் 50 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 3 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிப்பப்ளிக் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 128 முதல் 148 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 42 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 2 முதல் 10 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 129 முதல் 151 இடங்களும், காங்கிரசுக்கு 16 முதல் 30 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 9 முதல் 21 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜி நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 110 முதல் 125 இடங்களும், காங்கிரசுக்கு 45 முதல் 60 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 1 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இமாச்சல பிரதேசத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதில், இழுபறி நிலவும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணப்பில் தெரியவந்துள்ளது. ரிபப்ளிக் – மார்க் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 34 முதல் 39 இடங்களும், காங்கிரசுக்கு 28 முதல் 33 இடங்களும், ஆம் ஆத்மிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 32 முதல் 40 இடங்களும், காங்கிரசுக்கு 27 முதல் 34 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டைம்ஸ் நவ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 38 இடங்களும், காங்கிரசுக்கு 28 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஜ் தக் – ஆக்சிஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 24 முதல் 34 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 40 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியா டுடே நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில், பாஜகவுக்கு 24 முதல் 34 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 40 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.








