தமிழகத்திற்கு டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. அதன் பிறகு, அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேலும் படிப்படியாக புயலாக தீவிரமடைந்து வட தமிழகம் புதுவை மற்றும் ஆந்திரா கடற்கரை அடையும்.
இதன் காரணமாக , டிசம்பர் 7ம் தேதி நள்ளிரவு முதல் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் அகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 8ம் தேதி உள்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ளிட்ட இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், 9ம் தேதி தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழையும் மற்றும் டிசம்பர் 10ம் தேதி உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தெற்கு ஆந்திராவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.








