தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்..? – பரீசிலனையில் டிஜிபி தம்பதி..!!

தமிழ்நாட்டின்  புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையின்  தலைமை இயக்குநர் பொறுப்பில் உள்ள டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி  ஓய்வு பெற உள்ளார்.  கடந்த…

தமிழ்நாட்டின்  புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான தேர்வு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு காவல்துறையின்  தலைமை இயக்குநர் பொறுப்பில் உள்ள டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதி  ஓய்வு பெற உள்ளார்.  கடந்த வருடமே பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று இந்த டிஜிபியாக பணியாற்றினார். தற்போது அவர் டிஜிபி பொறுப்பிலிருந்து பணி நிறைவு செய்கிறார். இதைனையடுத்து  புதிய  டிஜிபியை தேர்வு செய்வதற்கான  பணிகள்  நடைபெற்று வருகின்றன.

இதன்படி புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை தலைநகர் டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு , உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

புதிய டிஜிபிக்கான பரிந்துரை  பட்டியல் :

– டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா

– சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

– முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

– தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார்

– தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால்

– ஊர்காவல் படை டிஜிபி பி.கே.ரவி

– மின்வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள்

– சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி

– ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

– மத்திய உளவுத்துறை தென்மண்டல இயக்குநர் டி.வி.ரவிசந்திரன்

– இந்தோ- திபெத் எல்லை காவல்படை டிஜிபி ராஜீவ் குமார்

நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்து தமிழ்நாடு அரசிடம் பட்டியலை ஒப்படைக்கும். இதிலிருந்து ஒருவரை தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும்.

தமிழ்நாடு டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான இந்த பரிந்துரை பட்டியலில் தம்பதிகளான முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 30-ம் தேதி சைலேந்திரபாபுவுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெறும். வருகிற  29-ம் தேதி இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை. எனவே, 28-ம் தேதி, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியின் பெயர் வெளியிடப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.