கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு உப்பிலியப்பன் கோயில் வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஜூன் 29 ம் தேதியன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோயிலில் சுமார் ரூபாய் 10 கோடிக்கும் அதிக செலவில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானம் பிரகாரங்கள், சிறு சன்னதிகள், உள்ளிட்ட ஆலயம் முழுவதும் திருப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
யாக சாலைகளில் குண்டம் அமைப்பது தோரணங்கள் கட்டுவது வர்ணங்கள் பூசுவது போன்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 25ம் தேதியன்று சுதர்சன ஹோமத்துடன் தொடங்கி எட்டு கால பூஜைகளுடன் நிறைவடைந்து, 29ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ராஜகோபுரம் மூலவர் விமானம் ஆகியவற்றிற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக சட்டபேரவை கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து அறநிலைய ஆட்சி துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். கும்பாபிஷேகத்தை காண 5000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்த்து அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேக வேலைகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். கும்பாபிஷேக பணிகளை தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் உழவாரப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







