காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கப் போகும் 8வது தலைவர் யார்?

137 ம் ஆண்டில் பயணித்து வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனையான கட்டத்தில் உள்ளது. வரும் 2024 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வென்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க…

137 ம் ஆண்டில் பயணித்து வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனையான கட்டத்தில் உள்ளது. வரும் 2024 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வென்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க பல அரசியல் வியூகங்களை வகுத்துள்ளது. அதன்படி நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாக வேண்டும் என்பதே.

தேர்தல் வியூகம் மற்றும் இதர ஒருங்கிணைப்பு பணிகளை தற்போதைய தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மூத்த தலைவர்களுடன் இணைந்து செயல்படுத்துவது என தீர்மானித்துள்ளது. அதனால் தான் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ளார். கால் நூற்றாண்டுக்க்கு முன் , சீதாராம் கேசரியிடமிருந்து, சோனியா வசம் வந்த கட்சியின் தலைமை பதவி, மீண்டும் நிர்வாகிகளிடம் செல்ல உள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தலைமைக்கு ஐந்தாவது முறையாக நடக்கும் தேர்தல் இது. கார்த்தி சிதம்பரம் எம்.பி உள்ளிட்டவர்களின் ஆதரவோடு மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அடுத்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங் என பல பெயர்கள் அடிபட்டன. திடீர் திருப்பமாக மத்திய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் மற்றும் அதிருப்தி குழுவான ஜி.23 தலைவர்களின் ஆதரவுடன் மனு தாக்கல் செய்தார். இத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கே.என்.திரிபாதியும் மனு தாக்கல் செய்தார். மனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் திரிபாதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. சுமார் 10ஆயிரம் நிர்வாகிகளின் வாக்குகளை பெற்று வாகை சூடப்போவது யார் என காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன் கார்கே , சட்டம் பயின்றவர். மாணவர் காங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, படிப்படியாக கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ள அனுபமுள்ள சிறந்த நிர்வாகி. 1972 ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ, 2 முறை மக்களவை எம்.பி என தேர்தலில் தோல்வியையே காணாதவர். 2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முதல் முறையாக தோல்வியடைந்தார். இதனையடுத்து மாநிலங்களவை எம்.பியான கார்கே, குலாம் நபி ஆசாத்துக்கு பின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரானார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், மாநில அமைச்சராகவும் பல ஆண்டுகள் இருந்தவர். 1999, 2004 ம் ஆண்டுகளில் லிங்காயத்து சமுதாய அரசியல் கணக்கில், எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் தரம் சிங் கர்நாடக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது சக போட்டியாளராக இருந்தவர் மல்லிகார்ஜூன் கார்கேவே. மாநில முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை. புரோட்டாகாலில் அதைவிட ஒரு படி மேலானது என சொல்லப்படும் மத்திய கேபினட் அமைச்சர் பதவி, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கார்கேவை 2009 ம் ஆண்டு தேடி வந்தது.

கலகக்குரல் எழுப்பிய ஜி-23 தலைவர்களில் ஒருவராக சசி தரூர் இருந்தார். ஆனாலும் ஜி-23-யின் பெரும்பான்மையான தலைவர்களும், சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான தலைவர்களும் கார்கேவை ஆதரிக்கின்றனர். 80 வயதைக் கடந்த கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவரானால், ஜெகஜீவன் ராமிற்கு பிறகு காங்கிரஸ் தலைவராகும் இரண்டாவது தலித் தலைவராக இருப்பார்.

அறுபத்தாறு வயதாகும் மத்திய முன்னாள் அமைச்சரான சசி தரூர், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, பின்னர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். முப்பது ஆண்டுகள் ஐ.நா சபையில் முக்கிய பணி . சிறந்த எழுத்தாளர், அறிவு ஜீவி என வலம் வருபவர்.

2009 முதல் தற்போது வரை, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பியாக உள்ளார். மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். மூன்றாவது மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக , நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை, தரூரின் மீது சில காலம் சந்தேக ரேகைகள் இருந்தன.

எகானமி வகுப்பில் விமான பயணம் செய்வது, கால்நடைகளுடன் பயணம் செய்வது போல் உள்ளது என அமைச்சராக இருந்த போது சர்ச்சையாக பேசியவர். காந்தி பிறந்த அக்டோபர்  2 ம் தேதியில் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்காக மோடியை பாராட்டிய தரூர், தூய்மை இந்தியா விளம்பர தூதுவர்களில் ஒருவரானார்.

காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்யும் திட்டம் இது என கூட தரூருக்கு தெரியவில்லை என காங்கிரசார் தலையில் அடித்து கொண்டனர். எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவரான தரூர், பரபரப்புக்காகவே கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறாரா? என அவர் சார்ந்த கேரள மாநில தலைவர்களே கேள்வி எழுப்புகின்றனர்.

தென்னிந்தியாவில் இருந்து சேலம் விஜயராகவாச்சாரி, சரோஜினி நாயுடு, எஸ்.சீனிவாச அய்யங்கார், பட்டாபி சீதாராமையா, நீலம் சஞ்சீவி ரெட்டி, கே.காமராஜர் மற்றும் நிஜலிங்கப்பா என ஏழு பேர் காங்கிரஸ் கட்சியின் உயரிய பதவியான தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர்.

மல்லிகார்ஜூன் கார்கேவோ, சசி தரூரோ  யார் வென்றாலும் தென்னிந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் எட்டாவது தலைவர். அத்துடன் மிக சோதனையான காலத்தில் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் வரலாற்றுக்கும் உரியவராகவும் இருப்பார்.

-ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.