மித்ரனை தேடி வரும் எதிரி யார்?? – ‘தனி ஒருவன் 2’ படத்தின் புதிய அப்டேட்!!

’தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம்,…

’தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’ என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைகின்றனர். தனி ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவியும் நயன்தாராவும் ‘தனி ஒருவன் 2’-க்காக மோகன் ராஜா இயக்கத்தில் மீண்டும் இணைகின்றனர்.

இதையும் படியுங்கள் : நடிகர் வடிவேலுவின் சகோதரர் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மக்கள் மனதில் முத்திரை பதிக்கும் அழுத்தமான படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மோகன் ராஜாவும், சவாலான வேடங்களில் சளைக்காமல் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ள நடிகர் ஜெயம் ரவியும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இணைவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தியும், நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம்.வெங்கட் மாணிக்கமும் பணியாற்றுகின்றனர்.

சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் 26-வது திரைப்படமாக அமையவுள்ள ‘தனி ஒருவன் 2’-வை மோகன் ராஜா இயக்க ஜெயம் ரவி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.