நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியை (SIR) மேற்கொள்ள முடிவு செய்தது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கக் கோரி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதில் கூடுதல் மனு ஒன்றை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவைத் தாக்கல் செய்த துணைத் தேர்தல் ஆணையரிடம் இருந்து உறுதிமொழியுடன் கூடிய பதில்களைப் பெறவும் அவர்கள் கோரியுள்ளனர்.
48 கேள்விகள் எழுப்ப அனுமதி
சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு அனுமதி வழங்கியது யார், வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், தேர்தல் ஆணையத்தின் இணையவழி வாக்காளர் பதிவு அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளிடம் 48 கேள்விகளை எழுப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தாக்கல் செய்த பதில் மனுவிலும், இந்த மாதம் தாக்கல் செய்த கூடுதல் மனுவிலும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையிலேயே எஸ்ஐஆர் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தக் கூற்றுக்கு ஆதரவாக எந்தக் கோப்புப் பதிவுகளும், கூட்டக் குறிப்புகளும், முடிவு எடுக்கப்பட்ட தேதிகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என 2025 ஆகஸ்ட் மாதம் அளிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) பதிலையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருடையது?
நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடத்துவது தொடர்பான முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் கூட்டு முடிவாக எடுக்கப்பட்டதா அல்லது மற்ற தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல், அனுமதி மற்றும் சம்மதம் இன்றி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தினாரா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளப் பதிவில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரின் முடிவுகளுடன் மற்ற இரு தேர்தல் ஆணையர்களில் எத்தனை பேர் முரண்பட்டனர், நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடத்த முடிவு செய்தது யார், படிவம் 6-ல் மாற்றங்களை அங்கீகரித்தது யார், வாக்காளர் பட்டியலை அணுகுவதற்கான கட்டுப்பாட்டுடன் ERONET மற்றும் ECINET இணையவழி அமைப்புகளை மையப்படுத்த உத்தரவிட்டது யார் என்பன உள்ளிட்ட கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன.
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு
இந்தச் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியானது, தாங்கள் ‘வாக்குத் திருட்டு’ (Vote Chori) எனக் குறிப்பிடும் செயலுக்கு வழிவகுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை மற்றும் ஆவணங்களில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகள் தொடர்பான சர்ச்சைகளுக்குத் தீர்வு காண, 10 முக்கியப் பிரிவுகளில் கேள்விகளை எழுப்புவது அவசியம் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.




