தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால் இன்று தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழ் நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, திருப்பூர், வேலூர், அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தேனி, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




