தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் நேற்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை மதிமுக எம்.பி. துரை வைகோ வரவேற்றார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா? என்பதை ஜூன் 27 ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து தவெக ஆதரவு நிலைப்பாட்டை மதிமுக எடுக்க உள்ளதாக பேச்சுகள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
திமுகவிற்காக 34 தொகுதிகளில் நேரடியாக தீவிர பிரசாரம் செய்தேன். அதில் 24 தொகுதிகளில் திமுக வென்றுள்ளது. திமுகவின் ஆதரவினால் தான் எங்களின் (மதிமுக) 2 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். அதே போல திமுக வெற்றிக்கு எங்களின் பங்களிப்பும் உள்ளது.
ஆனால் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. மேலும் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விகிதமும், அவர்கள் சின்னத்தில் (உதயசூரியன்) தான் நிற்க வேண்டும் என்கிற நிர்பந்தம் ஆகியவை எங்கள் தொண்டர்கள் மத்தியில் ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
ஒரே ஒரு தொகுதியிலாவது தனி சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பதாக கூறினர். ஆனால் கடைசி நிமிடத்தில் அனைத்து இடங்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என கூறிவிட்டனர்.
ஜூன் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் அனைத்து நிர்வாகிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டு கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.







