மின்தடைக்கு திமுகவை காரணம் கூறுவதா…? – முதலமைச்சர் மீது ஆ.ராசா கடும் விமர்சனம்…!

மின்வெட்டிற்கு திமுக எப்படி காரணமாகும்…? என்று அக்கட்சியின் எம்.பி. ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதவது:

திருச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய்க்கு வீர வசனம் எழுதித்தந்தது யார்? பிரதமர் மோடியை 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்த முதலமைச்சர் விஜய் அவருடன் என்ன பேசினார் என்பதைக் கூறாதது ஏன்?

மற்றவர்களை எல்லாம் அல்லு சில்லு என்று மேடையில் பேசுகிறார். ஆனால், அந்த அல்லு சில்லுகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஆதரவை வாங்கியது அரசியலா? தில்லுமுள்ளா?

முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எனக்கு நல்லா வார்த்தை வந்துவிடும் என்கிறார்? இது ஒரு முதலமைச்சர் பேசக்கூடிய முறையா? நிர்வாகத்தைதான் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் எனக் கூறினோம். ஆட்சியில் நடக்கும் அசம்பாவிதங்களை அல்ல.

காவல் துறை உங்கள் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதுதானே? சட்டம் – ஒழுங்கை சரி செய்வதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்னை? செய்தியாளரை சந்திக்க ஏன் மறுக்கிறீர்கள்?

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து எப்போது பேசுவீர்கள்? பக்ரீத் தீர்ப்பு விவகாரத்தில் என்ன நிலைப்பாடு தவெக அரசு எடுத்துள்ளது. மும்மதங்களுக்கும் உரியவராக விஜய் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். ஆனால் இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பமாட்டார்..

ஆர்பிஐ அனுமதி இல்லாமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. இது கூட தெரியாமல் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறீர்கள். கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கூடுதல் மின்சாரத்தைப் பெற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டால், திமுக காரணம் எனக் கூறுகிறீர்கள்.

தமிழ்நாட்டிற்கு நான் தான் தலைவர் எனக் கூற விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்களை வேண்டாம் என்று 65% பேர் நிராகரித்துள்ளனர் என்பதை விஜய் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது” என ஆ. அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.