மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா – கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.