நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகியுள்ளது என்றும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, “தமிழகத்தின் திருவள்ளூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




