ஹார்முஸ் ஜலசந்தியில் மிதந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனைத் திரவியங்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐபோன்கள், சொகுசு வாசனைத் திரவியங்கள் அடங்கிய பெட்டிகள் கடலில் மிதக்கும் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் GFS Pride சரக்குக் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நேற்று (அக்.14) தீப்பற்றி மூழ்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் சுமார் 2,500 சரக்குக் கொள்கலன்கள் இருந்ததாகவும், அவற்றில் ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்த பொருட்கள் கடல் நீரில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறிய படகுகளில் வந்த சிலர், கடலில் மிதந்த பொருட்களைச் சேகரிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தபடவில்லை எனத் தெரிய வந்துள்ளது.

கப்பல் மூழ்கியதற்கான காரணம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, அனுமதிக்கப்படாத பாதையில் சென்றபோது கடற்படை கண்ணிவெடியில் சிக்கி கப்பல் மூழ்கியதாகக் கூறியுள்ளது. ஆனால், கடல்சார் அதிகாரிகள் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் கப்பல் தீப்பற்றி மூழ்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. செப்டம்பர் 23-ம் தேதி தாக்குதலுக்கு உள்ளான Cape Dao என்ற சரக்குக் கப்பலும் அப்பகுதியில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம், சர்வதேச கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. போருக்கு முன்பு உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.