தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்குவது எப்போது? மத்திய நிதியமைச்சர் பதில்

ஜிஎஸ்டி பயன்பாட்டு அறிக்கை வழங்கினால் தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி வில்சன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை…

ஜிஎஸ்டி பயன்பாட்டு அறிக்கை வழங்கினால் தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி வில்சன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழில் கேள்வி எழுப்பினார். அதாவது, 2020 முதல் 2023ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரத்து 879 கோடி ரூபாயை எப்போது தருவீர்கள் என கேட்டார்.

அதற்கு தமிழில் பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையிலும் இதே கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 10 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று தமக்கு தெரியவில்லை என கூறிய நிர்மலா சீதாராமன், 10 நாட்களுக்கு முன்பு பயன்பாட்டு சான்றிதழின்படி தமிழ்நாட்டிற்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும், இதற்கு முன்பு வழங்க வேண்டிய தொகைக்கான பயன்பாட்டு சான்றிதழ் வழங்காவிட்டால் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிக்க முடியாது எனக்கூறிய அவர், தமிழ்நாடு எம்பி கூறும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைக்கான சான்றிதழ் நிதியமைச்சகத்திடம் இல்லை என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.