2023ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் குரூப் 1 தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தது. அதில், குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், முதன்மை தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உதவி சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் 15ம் தேதியும், மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் 9ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் அடுத்தாண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும், குரூப்-4 தேர்வு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
மேலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் எதுவும், டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள தற்போதைய அட்டவணையில் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தற்போது குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ் தேர்வுகளில் முக்கிய தேர்வுகளான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி 2023 நவம்பரில் குரூப் 1 முதல்நிலை தேர்வும், 2024 ஜூலை மாதத்தில் முதன்மை தேர்வும் நடைபெறவுள்ளது என டிஎன்பிஎஸ்சி அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.







