லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது ‘லியோ’ . படத்தின் முதல் சிங்கிள் வெளியானது முதல் நேற்று வரை பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் ஆர்வமும் கொஞ்சம் கூட குறையவில்லை.
ஏனெனில் ‘லியோ’ திரைப்படம் எல்சியு-வில் உள்ளதா அல்லது வேறு எதுவும் புது முயற்சியை லோகேஷ் கனகராஜ் கையில் எடுத்துள்ளாரா என்ற கேள்விகளும் இருந்து கொண்டே இருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் பட்சத்தில் இன்று வெளியாகி உள்ளது லியோ. படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
இமாச்சலப் பிரதேசத்தில் பேக்கரி கடை வைத்திருக்கும் பார்த்திபன்(விஜய்) தனது மனைவி (த்ரிஷா) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் கூலிப்படையால் விஜய்-ன் கடையில் பிரச்னை நடக்க, அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கூலிப்படைகள் அனைவரையும் சுட்டுக் கொன்று விடுகிறார்.
அதன்பிறகு அந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் பார்த்திபனின் குடும்பத்தை பழிவாங்க துடிக்கின்றனர். ஒரு பக்கம் பார்த்திபனுக்கு இப்படி ஒரு பிரச்னை நீடிக்க, மறுபக்கம் இவர்தான் ‘லியோ’ என்று நினைத்து அவரை கொல்ல தாஸ் குழு சுற்றித் திரிகிறது. ஒரு குடும்பத் தலைவனாக இதை பார்த்திபன் எப்படி கையாண்டார்? இவர்தான் ‘லியோ’வா? போன்ற பல்வேறு விதமான முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழ்க்கப்படுகின்றன.
14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய், த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி இந்த படத்திலும் பக்கா சூட். டாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மாஸ்டர் எதார்த்தத்தையும் தாண்டி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரேஞ்சர் ஆபிஸர் ஆக வரும் கௌதம் மேனன் மற்றும் அவரது மனைவியாக வரும் ப்ரியா ஆனந்தும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பக்காவாக நடித்துள்ளனர்.
வில்லனாக வரும் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் (தாஸ் குழு) மிரட்டியுள்ளனர். கடைசி சீனில் வரும் அர்ஜுனின் ஆக்சன் காட்சிகள் படத்தை எங்கோ கொண்டு போகிறது. மடோனா செபஸ்டின் அவரது நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார். மிஷ்கின் நடிப்பு அற்புதம், ஆனால் படத்தில் பெரிதாக Scope இல்லை.
படத்தை பற்றிய அலசல்
ட்ரெய்லர் வெளியாகும் போது பெரிதாக பேசப்பட்ட கழுதைப் புலி சீன் படத்திலும் மாஸாக இருந்தது. கிட்டத்தட்ட 3 சீன்களில் 5 நிமிட காட்சியை Single Shot-ல் நடித்திருக்கிறார் விஜய். விஜய்-க்கும் த்ரிஷாவுக்கும் எந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி இருக்கு என்றால், லிப்லாக் அடிக்கும் அளவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி இருக்கு.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட LCU கனெக்சன் படத்தில் உள்ளது. ஆனால் எதிர்பார்த்த கனெக்சன் இல்லை. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற அளவுக்கு கனெக்சன் உள்ளது.
‘நா ரெடி’ பாடல் தியேட்டரில் பட்டைய கிளப்பிவிட்டது. ‘Badass’ பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதுபோக சாண்டிக்கு போடும் ‘டாமி டாமி’ என்ற பிஜிஎம் மாஸ்.
சண்டைக் காட்சிகளில் உள்ள ஸ்டைல் பிரமாதம். ஆனால் ஒரு ஆள் 200 பேரை அடிப்பது போன்ற காட்சிகள் ரியாலிட்டிக்கு ஒத்துவரவில்லை.
நடனத்தை பொருத்தவரை ‘நான் ரெடி’ பாடலுக்கான நடனம் மாஸ்டர்கிளாஸ். விஜய் மற்றும் மெடோனாவின் ஆட்டம் அமர்க்களம்.
LCU-வாக இருக்குமோ என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் போய்விடாதீர்கள். ஏனெனில் நீங்கள் நினைத்தபடி எந்த ஒரு படத்திற்கான மிகப்பெரிய தொடர்பும் இந்த படத்தில் இல்லை. லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை பார்க்காமல் இருந்தால் கூட இப்படம் புரியும். இந்த படம் முழுக்க முழுக்க வேறொரு ஜானர்.
மொத்தத்தில் History of Violence என்ற ஆங்கில படத்தால் இன்ஸ்பயர் ஆகி இந்த லியோ படத்தை இயக்கியிருக்கிறேன் என்று லோகேஷ் கூறியிருந்தார். அதன்படியே ஆங்காங்கே ‘History of Violence’ படத்தின் கதையை வைத்து, தமிழ் படத்தின் சாயலை கொண்டு வந்து மாஸ் காட்டி ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் லோகி….










