ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை காண தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார்.
15வது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஒடிசாவிலுள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்-ஐ உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஒடிசா அரசாங்கத்தின் அழைப்பு மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின் பேரில் ஒடிசாவில் நடைபெறும் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை காண நேரில் இங்கு வந்தேன். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஒடிசாவில் உள்ள மேம்படுத்தப்பட்ட விளையாட்ட உள்கட்டமைப்புகளை பார்வையிட்டேன்.
கலிங்கா மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடனும், மைதான பணியாளர்களுடனும் உரையாடினேன். அதேபோல் ஒடிசாவில் உள்ள கால்பந்து மைதனாம், உள்விளையாட்டு அரங்கம், டென்னிஸ் மைதானம் மற்றும் நீச்சல் குளங்களை பார்வையிட்டேன். ஒடிசா அரசின் இந்த முயற்சிகளை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் விளையாட்டுக்கான சிறப்பான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது அருமை என பதிவிட்டுள்ளார்.







