அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை காரணம் காட்டி அலுவலகத்தை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோருவோம் என்கின்றனர். ஒருவேளை உடனடியாக தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராதபட்சத்தில் அதிமுகவிற்கு என தற்காலிக அலுவலகம் அமைப்பது குறித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டம் எங்கு வைத்து நடைபெறும் என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அதிமுகவின் 98 சதவீத நிர்வாகிகளும் தங்கள் பக்கம் இருப்பதால், நீதிமன்ற வழக்கில் தாங்கள் வெல்லுவோம் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பது என ஏற்கனவே முடிவெடுத்துவிட்டோம். இருப்பினும் பொதுக்குழுவிற்கு பிறகு 98 சதவீத சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பக்கம் உள்ளனர் என்பதை வெளி உலகிற்கு காட்டவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும் ஒற்றைத் தலைமை பிரச்னை குறித்து பொதுக்குழுவில் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதால், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கமே உள்ளனர் என்பதை மத்தியில் ஆளும் பாஜகவிற்கு காட்டவே இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.
வரும் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதால், இதில் பாஜக வேட்பாளரையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என்ற கொறடா உத்தரவும் அன்றைய கூட்டத்தில் பிறப்பிக்கப்படும் என்றனர்.
சென்னை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திப்பார். அதற்கு முன்னர் தேவைப்பட்டால் அவர் டெல்லி செல்லவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். இது ஒருபுறமிருக்க, அதிமுக தலைமை அலுவலக விவகாரத்தில் ஒரு தீர்க்கமான தீர்ப்பு கிடைக்க காலதாமதம் ஏற்பட்டால், அக்கட்சிக்கு என தற்காலிக அலுவலகம் அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியே முடிவெடுப்பார் என தெரிகிறது.
அதிமுகவின் மற்றொரு அணியை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸை பொறுத்தவரை அதிமுக உட்கட்சி விவகாரத்தில் கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளார். ஒருவேளை உயர்நீமன்ற தீர்ப்பு என்பது தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால், உடனடியாக மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை கூட்டியது யார் என்ற விபரம் தெரிவிக்கப்படாமலே அனைவருக்கும் கடிதம் அனுப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் தங்களது தரப்பு வாதமாக எடுத்துரைப்போம் என்கின்றனர்.
இப்படி இரு தரப்பிலும் கடுமையாக சட்டப்போராட்டம் நடத்தி வருவதால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலை ரத்தத்தின் ரத்தங்களை சூழ்ந்துள்ளது.
இராமானுஜம்.கி









