சாய் பல்லவி நடிப்பில் கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கார்கி திரைப்படம் எப்படி உள்ளது – விமர்சனம்
9 வயது சிறுமி, 4 வட மாநில தொழிலாளிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். காவல்துறை விசாரணையில் 5வதாக ஒரு நபரும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. சாய் பல்லவியின் தந்தை, சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகிறார். தன் தந்தையை இதிலிருந்து சாய் பல்லவி காப்பாற்றுகிறாரா ? பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்கிறதா என்பதே கார்கி திரைப்படத்தின் கதை.
கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ளது.
அன்றாடம் குழந்தைகள் முதல் பெண்களை வரை சந்தித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை சினிமா தன்மை கலக்காமல் இயக்குனர் கௌதம் ராமசந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தையின் மனநிலை, அதன் பாதிப்பாக அந்த குடும்பத்தில் நிலவும் சூழலை காட்சிப்படுத்தியுள்ள விதம் பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும்படி உள்ளது.
அதே நேரத்தில் பாலியல் குற்றாச்சாட்டுக்கு ஆளாக்கப்படும் நபரின் குடும்பத்தினர் இந்த சமூகத்தால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது. பள்ளி டீச்சராக நடித்துள்ள சாய் பல்லவி ஒட்டுமொத்த படத்தையும் அதற்கு பின்னால் இருக்கும் வலிகளையும் தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கறிஞர் கதாப்பத்திரத்தில் நடித்துள்ள காளி வெங்கட்டின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் நிச்சயம் திருப்புமுனையாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
படத்தின் இரண்டாம் பாதியில் வரும் திருநங்கை நீதிபதி கதாப்பாத்திரமும் அவர் பேசும் வசனங்களும் ஆண், பெண் என இரு பாலினத்தவர்களின் வலிகளையும் பிரதிபலிக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறை உலகெங்கும் தினசரி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில், ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும், 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படிப்பட்ட இந்த சமூகத்தில் அன்றாடம் நடக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நம் கண் முன் கொண்டு அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைத்துள்ள கார்கி திரைப்படத்தை ஆண்களாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய குடும்பத்துடன் கட்டாயம் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
– தினேஷ் உதய்









