‘சாதிய வன்மத்தையே காட்டுகிறது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக விவகாரம்; சாதிய வன்மத்தையே காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பருவத் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டது தற்போது பேசுபொருளாகி பலரது…

பெரியார் பல்கலைக்கழக விவகாரம்; சாதிய வன்மத்தையே காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பருவத் தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா கேட்கப்பட்டது தற்போது பேசுபொருளாகி பலரது கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் இந்த சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ள அவர்,

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறியப் பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்’- கி.வீரமணி

மேலும், ‘வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவற்றுக்குக் காரணம் எனத் துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளைப் பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது இந்த குற்றம் எப்படி நடந்தது?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதைச் சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.