இஸ்லாமியர்களுக்கு திமுக என்ன செய்தது? – சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

எங்கள் சமுதாயத்தை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, மதுரை மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது அரசியல் பயணம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், நான் இந்த அவையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மதுரை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். சிலர் நீங்கள் எல்லாம் எம்.எல்.ஏ.ஆக முடியுமா? அதற்கு ரூ.15 கோடி வரை செலவாகுமே, என்ன செய்வீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். முதலமைச்சர் விஜய்யின் முகத்திற்காக நாங்கள் அனைவரும் தற்போது இந்த அவையில் அமர்ந்திருக்கிறோம்” என்றார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதாகவும், தங்களுக்கு இரண்டு தொகுதிகளும் 4 சதவீத வாக்குகளும் மட்டுமே கிடைக்கும் என்று சிலர் விமர்சித்த நிலையில், அதையும் தாண்டி தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாக வந்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மதுரைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை சிலர் விமர்சிப்பதாகவும், குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள நல்ல திட்டம் இது என்றும் கூறினார். வக்ஃப் வாரிய சட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.

இஸ்லாமியர்கள் 13 பேரை தேர்தலில் போட்டியிட முதல்வர் வாய்ப்பு கொடுத்தார். இஸ்லாமியர்களின் பாதுகாவலர் என திமுகவினர் கூறிக்கொள்வர். ஆனால் முஸ்லீம் என கூறி (அவை குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தை கூறினார்) திமுகவினர் பேசியுள்ளனர். திமுகவினர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் குறிப்பிட்டபோது, அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், நான் பத்திரிகைகளில் வரும் செய்திகளை மட்டும் சொல்லவில்லை. ஆதாரத்துடன் பேசுகிறேன். உண்மைக்கு புறம்பான எந்த செய்தியையும் நான் கூறவில்லை. அதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இஸ்லாமிய சமுதாயத்திற்காக திமுக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஜவஹிருல்லா பேசுகையில், “சிறுபாண்மையினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சி என்றும், இதே சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டம் மற்றும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், 25 ஆண்டுகள் சிறையில் இருந்த இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ததும் திமுக ஆட்சிதான் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ், “இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் பட்டியலின மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் போராட்டங்களையும் மாநாடுகளையும் முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எவ.வேலு பேசுகையில், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக இருந்தது திமுகதான் என்றும், அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “வசந்தம் கார்த்திகேயன் தனது இருக்கையை விட்டு அடிக்கப் பாய்ந்து வருவது போல் ஓடி வருகிறார். அதேபோன்று பூண்டி கலைவாணனும் செயல்படுகிறார். இந்த அவைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் பயப்படாது என்றார்.

மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் ஒருமையில் பேசக்கூடாது என்றும், அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். உறுப்பினர் பேச்சில் தவறு இருந்தால், அதற்கான ஆதாரங்களை சபாநாயகரிடம் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், உறுப்பினர் பேசியதில் தவறு இருந்தால், அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கலாம் என்றார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி செழியன் பேசுகையில், மதம் தொடர்பாக பேசும்போது உறுப்பினர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், திமுக எப்போதும் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிமுன் அன்சாரி மீண்டும் பேசுகையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காலங்களில் மதக் கலவரங்களை ஒடுக்கி, இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருந்துள்ளதாக தெரிவித்தார். பாமக மாநாடு நடத்தியது உண்மைதான் என்றும், அதேபோன்று தாங்களும் பல்வேறு மாநாடுகளை நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், பிரிவினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து சபாநாயகர் பேசுகையில், மதுரை சட்டமன்ற உறுப்பினர் தன்னிடம் ஆதாரங்களை அளித்துள்ளதாகவும், அது குறித்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார். அவையின் மாண்பையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு அந்த விவகாரம் தொடர்பாக அவையில் மேலும் விவாதிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

இதன்பின்னர் பேசிய தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, தங்களது சமுதாயத்தை அவமானப்படுத்தியதாகக் கூறி அவையில் கண்ணீர் மல்க பேசினார்.

தொடர்ந்து, மதுரைக்கு சிறப்பு ரயில் சேவைகள் தேவை என்றும், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முதலமைச்சர் வருகை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மதுரையில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், காவிரி காய்ந்து போனது எந்த ஆட்சியில்? கச்சத்தீவை கைவிட்டது எந்த ஆட்சி? 30 ஆயிரம் கோடி ஊழல் என அப்போதைய அமைச்சர் முனுமனுத்தது எந்த ஆட்சியில், என கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சியால் தமிழ்நாடு நாசமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.