சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் சில இடங்களில் சென்னை, நீலகிரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தென்காசி, வேலூர், கோயம்புத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




