காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு சிறப்பு ரயிலில் 200க்கும் மேற்பட்டோர் இலவசமாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
காசியில் உள்ள புனித தலங்களையும், பெருமைகளையும் அறிந்து கொள்வதற்காகவும், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் விதமாகவும் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து மொத்தம் 216 பேர் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர் குறிப்பாக 200 மாணவர்களும் 16 தன்னார்வலர்களும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த இலவச பயணத்திற்கு தேவையான அனைத்து பொறுப்பையும் மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் irctc பொறுப்பேற்றுள்ளன. ஒரு மாதம் நடைபெறும் நிகழ்வின் அறிவு சார் ஒருங்கிணைப்பாளராக பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி செயல்படுகின்றன.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதுடன், சந்தை மற்றும் தெருக்களுக்கு சென்று சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு மாலையில் கங்கையில் படகு சவாரியும், படகில் சென்றபடியே படித்துறைகள் மற்றும் கங்கா ஆரத்தி நிகழ்வுகளை பார்க்கவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
19ம் தேதி உள்ளூர் கோவில்கள், கேதார் காட், குமாரசாமி மடம், அனுமன் காட் மற்றும் சுப்பிரமணியம் பாரதி இல்லத்தை பார்க்கவும் இந்த நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காசி இந்து பல்கலைகழகத்தில் நடைபெறும் சங்கமம் தொடக்க நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். 5வது நாள் நிகழ்வில் படகு மூலம் திரிவேணி சங்கமத்தை தரிசித்த பிறகு அயோத்தியா சென்று அங்கு சுற்றி பார்க்கின்றனர். அதன் பிறகு ரயில் மூலம் தமிழகம் திரும்புகின்றனர்.








