அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?

மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இன்று டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விசகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார். மத்திய அமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை இன்று டெல்லியில் சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விசகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளார்.

மத்திய அமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாகவும், தமிழ்நாடு அரசு கொண்டு சென்ற பிரச்சினையை அவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தாகவும் குறிப்பிட்டார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் DPR அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய அணுகுமுறை சரியல்ல என தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல், எந்த முடிவும் எடுக்கப்படாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

மேகதாது பகுதி

மார்கண்டேய நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தலைவரை நியமனம் செய்ய மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரி – குண்டாறு – வைப்பாறு நதிகளை இணைக்க நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் துணை அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், பேபி அணை கட்டப்பட்டால் 152 அடி நீர் தேக்க முடியும் என்றும், அதேவேளையில், அணையின் மொத்த நிர்வாகத்தையும் கேரள அரசிடம் கொடுத்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.