நிலக்கரி கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
நிலக்கரி கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 8 ஐபிஎஸ் அதிகாரிகளை
விசாரணைக்காக புதுடில்லிக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஞானவந்த் சிங் , எஸ். செல்வமுருகன், கோட்டேஸ்வர ராவ், ஷியாம் சிங், ராஜீவ் மிஸ்ரா, சுகேஷ் குமார் ஜெயின் மற்றும் ததாகதா பாசு ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்று தனித்தனியாக தேதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
“இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் நிலக்கரி கடத்தல் வழக்கில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த அதிகாரிகள் ஊழலில் ஆதாயம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் கடத்தல் நடந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டனர்” என்று அமலாக்கத்துறை அதிகாரி கூறினார். கடந்த ஆண்டும் இந்த 8 பேரில் 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் நிறுவனத்தில் நிலக்கரி கடத்தல் நடந்தது தொடர்பாக ஆளும் திரிணாமூல் காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக இருந்து அனுப் மாஜி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் திரிணாமூல் காங்கிரசின் இளைஞரணித் தலைவர் வினய் மிஸ்ரா பற்றி தகவல் அளிப்போருக்கு சிபிஐ 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்துள்ளது.







