பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் எவர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கும் அமலாக்கத்துறையின் அதிகாரத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏஎம் கன்வில்கர் தலைமையிலான அமர்வு, நிதி மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வது, சோதனை நடத்துவது, பணம், ஆவணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்வது, குற்றச் செயலுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியல் சாசனப்படி அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் விவகாரத்தில் தற்போது உள்ள இரட்டை நிபந்தனைகளையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதாவது, ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் எந்த குற்றமும் செய்ய வாய்ப்பில்லை என நீதிமன்றம் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் எனும் இரு விதிகளையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதேபோல், அமலாக்கத்துறை வழக்கு விசாரணை அறிக்கை என்பது அதன் அலுவலக ஆவணம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அதனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வசதியாக மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு பதில் வாதத்தை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் , பணமோசடியில் ஈடுபட்டுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நீரவ் மோடி ஆகியோருக்கு எதிரான மூன்று வழக்குகளில் மட்டும் ரூ. 18,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோல், அமலாக்கத்துறை தொடர்ச்சியாக ஏராளமான வழக்குகளை விசாரித்து வருவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்துள்ளது. அதிகப்படியான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கவில்லை என தெரிவித்துள்ள மத்திய அரசு, காவல்துறை உள்ளிட்ட குற்ற தடுப்பு அமைப்புகளால் கடந்த 5 ஆண்டுகளில் 33 லட்சம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 2 ஆயிரத்து 86 வழக்குகளை மட்டுமே பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.