சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில், ‘WeStandWithSuriya’ என்ற ஹாஷ்டேகை டிரெண்டாக்கி வருகிறனர்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த, ‘ஜெய்பீம்‘ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இந்த படம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், படத்தில் வரும் காட்சி ஒன்றில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. தொடர்ந்து சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு சூர்யா பதிலும் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் மறைந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்திருப்பதாக நடிகர் சூர்யா நேற்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. பாமகவினர் வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் போஸ்டரை மாற்றி ஒட்டியது. திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது.
தொடர்து நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். பின்னர் சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் ட்விட்டரில், ‘WeStandWithSuriya’ என்ற ஹாஷ்டேகை டிரெண்டாக்கி வருகிறனர்.








