சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்

தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால், சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து…

தொடர்ந்து மண்சரிவுகள் ஏற்படுவதால், சுற்றுலா நோக்கில் ஏற்காடு வருவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மண்சரிவுகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் ஏற்காடு குப்பனூர் சாலையில் பாறைகள் சரிந்து விழுந்தும், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இரண்டு மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இந்த மண்சரிவால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பு இல்லை என்றாலும் சாலையில் செல்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏற்காடு வட்டத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்காடு மலைப் பாதைகளில் ஆங்காங்கே நில சரிவுகள் ஏற்பட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழும் நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்து தடை ஏற்படுகிறது.  இந்நேர்வுகளில் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தியாவசிய நோக்கம் இன்றி சுற்றுலா நோக்கில் ஏற்காட்டிற்கு செல்வதை தற்போதைய சூழலில் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஏற்காடு மலைப்பாதையில் பாதுகாப்பான போக்குவரத்துக்காக மாவட்ட நிர்வாகம்  வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது ” என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.