பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாட் வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 217 ரன் களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங் சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனால், 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது. அடுத்து இறங்கிய ரோஸ்டன் சேஸ், பிளாக்வுட் ஜோடி 68 ரன்கள் சேர்த்த நிலையில், சேஸ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய பிளாக்வுட் அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ், ஹோல்டர் (16 ரன்) அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது. ஆனால் அடுத்து இறங்கிய பந்துவீச்சாளர் கெமர் ரோச் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றியை பெற்றது. இந்த அதிர்ச்சியை பாகிஸ்தான் அணி எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.







