இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கின்னார் (Kinnaur) மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்
பாறைகள் திடீரென விழுந்து ஏற்பட்ட நிலச்சரிவில், அந்த வழியாகச் சென்று கொண்டு இருந்த அரசுப் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன.
பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. சில வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கின. வாகனங்களில் இருந்தவர்கள் அப்படியே புதைந்தனர். மீட்பு பணிகளில் இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்துக்கு பிறகு 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்றுமுன் தினம் வரை 13 பேரின் உடல்கள் மீட்கப் பட்டன. இந்நிலையில், நேற்று காலையில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து 15 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.









